கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கிவரும் நிலையில், இன்று காலை சில வார்டுகளில் சிற்றுண்டி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலர், மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டபோது, போதிய ஊழியர்கள் இல்லை அதனால் தங்களால் இயன்றவரை வேகமாக சிற்றுண்டி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், காலை 9.30 மணியை தாண்டியும் சிற்றுண்டி கிடைக்காததால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் பசியால் அவதிப்பட்டனர். மேலும், உணவு தரமுடியாது என்றால்எங்களை வீட்டிற்கே அனுப்பிவிடுங்கள் என அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.