கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள தொற்றுநோய், தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் 71 பேர் கரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் நேற்றுடன் 8 பேர் மரணமடைந்தனர். எனினும் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதுவரை 58 பேர் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் டெல்லியில் நடந்த முஸ்லிம் மத மாநாட்டில் பங்கேற்றவர்கள், ஒருவர் விமான நிலையத்தில் பணியாற்றியவர். இதில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளடிச்சிவிளையைச் சேர்ந்த 2 பேர், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த 2 பேர் மேலும் மணிகட்டி பொட்டலைச் சேர்ந்த வாலிபரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டிற்குச் சென்ற மூன்று பேரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.