தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் புகைப்படக் கலைஞர் தர்ணா! - Kanniyakumari

கன்னியாகுமரி: பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் புகைப்படக் கலைஞர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புகைப்படக் கலைஞர்

By

Published : Apr 26, 2019, 5:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுத்து கொடுக்கும் பணிக்காக 3 வருடத்திற்கான உரிமையை பெற்றுள்ளார். இதற்காக 2,45,000 ரூபாயும் இவர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் இன்று குடும்பத்துடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்குள் நுழைந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் உதவி ஆய்வாளர் ஆதாம் அலி, சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், ‘வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. கடந்த 5 மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்பட்டது. சிறிய கடல் சீற்றம் மற்றும் அலை அடித்தாலே அதனைக் காரணம் காட்டி படகு போக்குவரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் எனக்கு வருமானமே கிடைப்பதில்லை. இந்தத் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று நம்பி எனது மகள்களை கடன் வாங்கி பொறியியல் படிப்பு படிக்கவைத்து வருகிறேன். தற்போது கடனை அடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. நான் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியே தெரியவில்லை. தற்போதும் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் படகு போக்குவரத்தை நிறுத்திவிட்டனர்’ எனக் கண்ணீர் மல்க கூறினார்.

பின்னர் இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஆதாம் அலி, நாளை காலை சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் சுரேஷையும் காவல்நிலையம் வருமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து புகைப்படக்கலைஞர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details