கன்னியாகுமரி:புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆகும் செலவினை, மக்கள் பிரச்னைகளுக்கு அரசு செலவிடட்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்ததால் வீதிக்கு வந்த டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் ஈடுபட்டுவருவதாகவும், கரோனாவால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் உள்பட பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது என்று தனது கண்டனத்தை பதிவுசெய்தார்.
நாடாளுமன்ற கட்டடத்துக்காக செலவிடப்படும் பணத்தை, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி, அதனைத் தொகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டி மேலும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலில் அவர் கட்சியை தொடங்கட்டும் என்றவர், யார் எங்கு கட்சியைத் தொடங்கி கூட்டணி அமைத்தாலும், திமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெற்று, ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்று தெரிவித்தார்.