கன்னியாகுமரி: தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கட்டமைப்பு சரியில்லாததால் இதுவரை 26 மீனவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த துறைமுகத்தைச்சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று (ஆக.17) நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி மாநிலத் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேந்திரகுமார், பிரின்ஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதுகுறித்து ஜார்ஜ் ராபின்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை விபத்து இல்லாத துறைமுகமாக மாற்ற கட்டமைப்புகளை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்திய போதிலும் தமிழ்நாடு அரசும் மீன்வளத்துறையும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, இதனைக் கண்டித்து வரும் 26ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரளான மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்று கூறினார்.