கன்னியாகுமரி:குடியரசு தினத்தையொட்டி இன்று(ஜன.26) தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மக்களின் அனுமதி இல்லாமல் பள்ளத்தூர் என்ற ஊரின் பெயரை 'மேலகிருஷ்ணன்புதூர்' என மாற்றியது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. 150 குடும்பங்கள் வாழும் இந்த ஊரின் பெயரை, மக்களின் அனுமதி இல்லாமல் மாற்றம் செய்ததால் அரசின் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளில் ஊரின் பெயர் பள்ளத்தூர் என்றும், புதிதாக வழங்கப்பட்டு வரும் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட ரசீதுகளில் 'மேலகிருஷ்ணன்புதூர்' என்றும் பதிவாகியிருப்பதால், அரசு சலுகைகள், வங்கிக் கடன் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தனர்.