கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி, தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அரசு உத்தரவின்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகள், விடுதிகள் இன்று(டிச.07) முதல் திறக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், குறைவான மாணவர்களே வந்துள்ளனர்.
மாணவர்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டும், கிருமிநாசினி வழங்கப்பட்டும் மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல், இன்று சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர் .
கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்கள் அதேபோல், கோவையில் உள்ள அனைத்து கலை - அறிவியல் கல்லூரிகளிலும் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும் சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி, தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் பயிலும் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளான அரசு கூறிய அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் கல்லூரிகள் திறப்பு: பலத்த பாதுகாப்பு