அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் டிடிவி தினகரனை வரவேற்பதற்காக பொதுக்கூட்ட மைதானத்திற்கு வெளியே பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இரு குழுவினர் இடையே போட்டி
மாவட்டத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த செண்டை மேள கலைஞர்களின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அப்போது மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செண்டை மேள குழுவினருக்கும், இரணியல் பகுதியைச் சேர்ந்த செண்டை மேள குழுவினருக்கும் இடையே செண்டை மேளம் இசைப்பதில் போட்டி ஏற்பட்டது.
டிடிவி தினகரன் பங்கேற்ற விழாவில் மோதல்! கைகலப்பு
ஏற்கனவே இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்த நிலையில் போட்டி போட்டு செண்டைமேளம் இசைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருத்தரப்பினரிடையே கைகலப்பாக மாறியது.
இந்தத் தாக்குதலில் இரணியல் குழுவைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் 3 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நேசமணி காவல்துறையினர், இரு பிரிவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
டிடிவி தினகரன் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பேசும் பொருளாகமாறியுள்ளது.