கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதனை தங்குத்தளமாக கொண்டு சுமார் 350 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்வர்கள் மீன்பிடித்து வருகின்றர். இதனை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவ குடும்பங்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமுதாய தொழிலாளர்களும் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று குமரி மாவட்ட மீன்வளத் துறையினர் டோக்கன் வழங்கிவந்தனர். இதனால் மீன்பிடிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை எனவும் மிகவும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது எனவும் மீனவர்கள் சார்பில் தெரிவித்தனர். அதன்பின், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்து சின்ன முட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் 48 மணிநேரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிக்குள் மீன் பிடிக்க சென்றுவிட்டு ஒருநாள் கழித்து காலை 10 மணி முதல் 12 மணிக்குள் கரைக்கு 48 மணிநேரத்திற்குள் திரும்பவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தமிழ்நாடு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.