கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகேயுள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (35). இவர் மயிலாடி பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு சாம் சுந்தர் என்ற 7 வயது மகனும், சஞ்சனா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
நெல்லையில் உள்ள உறவினர் திருமணத்திற்கு அம்பிகா சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் தந்தை செந்திலுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். திருமணத்திற்குச் சென்ற அம்பிகா வீட்டிற்குவந்து பார்த்தபோது சிறுவன் சாம் சுந்தர் ஸ்கிப்பிங் விளையாடும் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.