கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம், வள்ளியூர் பூங்கா நகர், நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர், முத்துராஜா. இவரது மனைவி ஜோதிகா. இவர்களுக்கு ஹரி என்ற 6 மாத ஆண் கைகுழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் முடிந்தவுடன் இரவு வடசேரி பேருந்து நிலையத்தில் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துராஜா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து மது அருந்தி விட்டு பேருந்து நிலையத்தில் தூங்கி விட்டனர். அப்போது நள்ளிரவில் ஜோதிகாவின் 6 மாத ஆண் குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுள்ளனர்.
அதிகாலையில் எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. பதறிப்போன தம்பதியர் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேருந்து நிலையம் முழுவதும் தேடிய பின்னரும் குழந்தை கிடைக்காததால் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வடசேரி போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த போது, சேலை அணிந்து அதன் மேல் சட்டை அணிந்து வந்த பெண் ஒருவர், குழந்தை ஹரியை தூக்கி செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் இதில் தனிப்படை அமைத்து ரயில் நிலையம், பேருந்து நிலையம் எனப் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதனை அடுத்து, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் அப்பெண் ஏறிச் சென்ற சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கேரளா மாநில போலீசாருக்கும் தகவல் அளித்து இருந்தனர். இந்த நிலையில், நான்காவது நாளான இன்று (ஜூலை 27) கேரளா மாநிலம், கொல்லம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக ரயில்வே போலீசார் கன்னியாகுமரி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.