கன்னியாகுமரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சந்திராயன்-1 திட்ட அலுவலர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஜூலை மாதம் நிலாவிற்கு செயற்கைக்கோள் அனுப்ப வாய்ப்புள்ளது. வருங்காலத்தில் மனிதர்கள் நிலாவுக்கு செல்லும்போது இறங்கும் இடம் மற்றும் நீர் இருக்கும் இடங்களை சந்திராயன் செயற்கைக்கோள் நமக்கு காட்டுகின்றன.
'ஜூலையில் நிலாவிற்கு செயற்கைக்கோள் அனுப்ப வாய்ப்பு' - மயில்சாமி அண்ணாதுரை தகவல் - satellites launch
கன்னியாகுமரி: "ஜூலை மாதம் நிலாவிற்கு செயற்கைக்கோள் அனுப்ப வாய்ப்புள்ளது" என்று சந்திராயன் -1 திட்ட அலுவலர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. நமது மங்கள்யான் செயற்கைக்கோள் கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கோளின் பருவநிலை மாற்றத்தை கண்டறிந்துள்ளது. நீரோட்டங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் மேகக்கூட்டங்கள் உருவாவது போன்றவை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. அதை நோக்கிய ஆய்வு இப்போது நடக்கிறது.
சீனாவில் இனி நடக்கப்போகும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டிக்கான வீரனை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல அறிவியல் துறையிலும் சிறுவயது முதலே தயார்படுத்த வேண்டும். அதற்கான 16 திட்டங்கள் வைத்துள்ளோம். அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்து மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும்.செயற்கைக்கோள் அனுப்புவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பில்லை. ஓசோனில் உள்ள ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தது செயற்கைக்கோள் மூலமாகத்தான். விண்வெளியில் வரும் துகள்கள் பெரும்பாலும் பூமியில் வர வாய்ப்பில்லை. வேகமாக பூமிக்கு வரும்போது காற்றின் உராய்வு ஏற்பட்டு அனைத்தும் எரிந்து போகும், என்றார்.