தமிழக அரசுக்கு சைதன்யானந்தஜி மகராஜ் எச்சரிக்கை கன்னியாகுமரி:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், வரும் 4ஆம் தேதி மாசி கொடை விழா தொடங்க உள்ளது. இங்கு 85 ஆண்டுகளாக இந்து சமய மாநாடு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
85 ஆண்டுகளாக ஹந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற்று வந்த இந்து சமய மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, இதை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி, சைதன்யானந்தஜி மகராஜ் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தில், மாசி கொடை விழாவின் போது 85 ஆண்டுகளாக இந்து சமய மாநாடு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்து மக்களிடையே ஒரு ஒற்றுமை ஏற்பட்டு மதமாற்றத்திற்கு தடையாக இந்த இந்து சமய மாநாடு இருந்து வருகிறது.
இந்த ஆண்டு மாசி கொடைவிழா வரும் 4 ஆம் தேதி கொடியற்றதுடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்து சமய மாநாடு ஹைந்தவ சேவா சங்கம் நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அறநிலையத்துறை சமய மாநாடு நடத்துவதாக கூறுவது யாரை வைத்து நடத்துவார்கள் என்பது கேள்வி. திமுக ஆதரவாளர்கள் இந்து சமய மாநாடு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தடை விதிப்பதை கண்டிக்கிறோம். இதனை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னொரு கலவரத்தை ஏற்படுத்த கூடாது. அந்த நிலைமைக்கு மீண்டும் இந்த மாவட்டத்தை கொண்டு செல்ல கூடாது. இந்து சமய மாநாடு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்திட கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் செவ்வாய்கிழமை, அனைத்து இந்துக்களும் வீதியில் வந்து தீபம் ஏற்றி அம்மனை பிரார்த்தனை செய்ய உள்ளோம். வெள்ளிக்கிழமை அனைத்து இந்து ஆலயங்களில் வெளியே இந்துக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய உள்ளனர்.
இந்த மாநாடு வழக்கம் போல் நடைபெறுவது போன்று 5ஆம் தேதி நடைபெறும். இதில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அனுமதி அளிக்கவில்லை என்றால் தமிழக அரசு இந்து விரோதியாக இருக்கிறார்கள் என்பதை நாடு முழுவதும் இருப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். மாநாட்டில் அரசியல் பேச வேண்டாம் என்று அவர்கள் தடை போடலாம், அதனை ஏற்று கொள்கிறோம்.
பண வசூல் செய்வது குறித்து புகார் எழுந்தால் முறையாக நிதி தணிக்கை செய்யட்டும். பண வசூல் நடைபெற்றது உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நிதி தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகர்கோவிலில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதலமைச்சர் 8ஆம் தேதி கலந்து கொள்ள அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. மாநாடு சம்பந்தமாக வரும் 5ஆம் தேதி பிரச்சினை ஏற்பட்டால் முதலமைச்சர், கன்னியாகுமரி வராமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது” என சைதன்யானந்தஜி மகராஜ் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்திருக்கிறது - கே.எஸ். அழகிரி