கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம்(25), நாகர்கோவில் கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக்(27) ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இருவரும் குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், வருகிற 31ம் தேதி மாலை 4 மணிக்கு இருவரையும் மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அருள் முருகன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவை எங்கு உள்ளது என்றும் அவற்றை வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துள்ளனரா என்றும் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.