மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் மத்திய, மாநில அரசுகள் சேர்க்க வேண்டும் கன்னியாகுமரி: ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலனி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இன்று காலை அனைத்து கடற்கரை கிராமங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் வள்ளங்கள் மற்றும் கட்டு மரங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.
குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டினம் துறைமுகங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர்
படகு மற்றும் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிஐடியு மீன் தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவ பெண்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மீனவர் தினம் கொண்டாடினர்.
பின்னர் மீன்பிடி தொழில் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் அந்தோணி பேசியது ”மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக கடந்த தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்ததை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே உடனடியாக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மீனவர்களுக்கு குளங்களில் மீன் பிடிக்கும் மீன் பாசி, கடந்த ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஏலம் விடப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. உள்நாட்டு மீனவர்கள் குளங்களில் மீன் வளர்த்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் ஆறு மாதமாக அந்த ஆணையை கிடப்பில் போட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக அமல்படுத்தி உள்நாட்டு மீனவர் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தேங்காய் பட்டணம் துறைமுக விரிவாக்க பணியினை விரைந்து முடித்து உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாமல் மீனவர்களை பாதுகாக்க வேண்டும். மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மேலும் ஒப்பந்தத்தை கொடுத்து தரமற்ற வேலைகளை செய்து வரும் ஒப்பந்த கம்பெனிக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாநாடு நடத்த முடிவு" - கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு அறிவிப்பு