கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் ஐசக் ஞானஜெபா (48). இவரது மகன் ஜெப்ரி(18). கல்லூரி மாணவரான இவர் நேற்று (நவம்பர் 1) காலை சாலையோரம் நின்றுகொண்டு செல்போனில் தன்னுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வேகமாக வந்த மூன்று பேர் ஜெப்ரியின் கையிலிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புடைய செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் சென்றனர்.
இது குறித்து ஜெப்ரி தென்தாமரைகுளம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பதிவு எண் இல்லாத பைக்கில் மூன்று நபர்கள் வருவதும், பைக்கை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கன்னியாகுமரி அருகில் உள்ள லீபுரத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் உடனடியாக லீபுரத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு பதுங்கி இருந்த ஜோனிஷ் (20), ராபர்ட் சிங் (20), அசோக் (21) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை தென்தாமரைகுளம் காவல் நிலையம் கொண்டு வந்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.