கன்னியாகுமரி:நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ். இவர் நாகர்கோவில் நான்குவழிச்சாலை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று கட்டும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் வங்கியில் 50 கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த நல்லகனி என்பவர், டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு மருத்துவமனை கட்டுவதற்குரிய பணத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதற்காக ஆஸ்திரேலியாவில் வங்கி கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்றும் கூறி மருத்துவர் ராமதாஸிடம் போலி ஆடிட்டர், மும்பையில் உள்ள ஆஸ்திரேலியன் வங்கியின் கிளையில் இருந்து அழைத்து வரப்பட்டதாக போலி வங்கி அதிகாரி அனிதா டேவிட் என்ற பெண், போலி வங்கி ஊழியர், கார் டிரைவர் என நான்கு பேரை அறிமுகப்படுத்தி, சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் நால்வரும் போலியாக ஒரு ஆஸ்திரேலிய வங்கியின் வெப்சைட்-ஐயும், பாஸ்வேர்டை கொடுத்து, அதனை திறந்து பார்த்த போது 50 கோடி ரூபாய் பணம் கிரெடிட் ஆனது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தனர். இதனை அடுத்து மோசடியாளர்கள் டாக்டர் ராமதாஸிடம், வங்கிக்கு மாற்றப்பட்ட பணத்தை பெற ஆஸ்திரேலியா செல்ல வேண்டும், அதற்காக விமான டிக்கெட் போட வேண்டும் என்று நல்லகனி கூறியதாகத் தெரிகிறது.