கன்னியாகுமரி: தூத்துக்குடியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மருத்துவம் 2ஆம் ஆண்டு, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது விடுதியில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தன்னை மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு வழக்கானது சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர்.
அதன் பின்னர் அவர்கள் மாணவி படித்த கல்லூரி மற்றும் மாணவி தங்கியிருந்த விடுதி அறை ஆகியவற்றை சோதனை செய்துவிட்டு, சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு விபரங்களை சேகரித்தனர்.
மேலும் சிறையில் உள்ள உள்ள பேராசிரியரிடமும், முன்ஜாமீன் பெற்றுள்ள மாணவர் மற்றும் மாணவியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு, பின்னர் பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பேராசிரியரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவானது மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசாரின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, ஒரு நாள் மட்டும் பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, பேராசிரியரை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அந்த விசாரணையில், பேராசிரியரிடம் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடித்தத்தைக் காட்டி விசாரித்தபோது, தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டும், எந்த கேள்விகளும் பேராசிரியர் சரியாக பதில் சொல்லவில்லை எனவும், மௌனமாக இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்தகட்டமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவப் பயிற்சி மாணவர்கள் இருவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்க பணம் கொடுக்காதால் மகன் வெறிச்செயல் - நடந்தது என்ன?