கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். இவர் பல பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, நெருக்கமாக இருந்த தருணங்களைப் படம்பிடித்து வைத்து, மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் புகாரின் பேரில், கோட்டார் காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ், காசியைக் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. காசியின் வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளும், சைபர் கிரைம் காவல் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காசியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் முடிந்து நாளை(ஜூன்19) காசியை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.