கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”ஜூலை 24ஆம் தேதி காலை 4 மணியளவில் 5 மீனவர்கள் தேங்காபட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, தேங்காபட்டணம் துறைமுகம் அருகே மிகப்பெரிய அலையில் சிக்கி படகில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் ஷிப்பு என்பவர் கடலில் மூழ்கி மாயமானார்.
கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு விபத்துகளில் ஷிப்பு உட்பட 2 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். எனவே காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிப்பதற்கு விமானப் படை, கப்பற்படை கொண்டு தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் மீனவரைக் கண்டுபிடித்து, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.