கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்துக்கழகம் ராணிதோட்டம் பணிமனையில் கிளை-2 மேலாளராக இருப்பவர் பெருமாள். இவர், தனக்கு கீழ் பணியாற்றும் பட்டியலின ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களால் சுமார் 161 நாட்களுக்குப் பிறகு காவல் துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஆசாரிபள்ளம் காவல் துறையினர், ராணி தோட்டம் கிளை 2 மேலாளர் பெருமாள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.