கன்னியாகுமரி:நாகர்கோவில் கோட்டார் சுமைதாங்கி தெருவைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் கடந்த 24-ஆம் தேதி மாலையில் வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த செந்தில் குமாருக்கு கால் முறிந்து உள்ளது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வந்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய அந்த காரை இன்று கோட்டாறு பகுதியில் நிற்பதை செந்தில்குமாரின் உறவினர்கள் பார்த்து உள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் கோட்டாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், அந்த காரை காவல் நிலையம் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, காரை யாரும் எடுக்க முடியாதபடி, முன் சக்கரம் மற்றும் பின் சக்கரங்களை வீல் லாக் போட்டு பூட்டி உள்ளனர். பின்னர் காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.