கோட்டாறு ரேஷன் கடையில் 30 மூட்டை அரிசி மாயம் - எங்கே போனது? கன்னியாகுமரி:சாதாரண ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் பெருமளவு பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசி அவர்களது ஒரு மாதத்திற்கான தேவையை பூர்த்தி செய்வது நிச்சயம் என்று கூறப்படுகிறது.
அதேபோன்று நடுத்தர மக்களில் பெரும்பாலானோர் ரேஷனில் வழங்கப்படும் அரிசி, கடைகளில் வாங்கப்படுவதை விட சற்று தரம் குறைவாக இருப்பதால் அவற்றை பெரும்பாலானோர் வாங்குவது இல்லை, அரிசியை வாங்காத காரணத்தால் ரேஷன் வாங்குபவர்களுக்கு கூடுதலாக பொருட்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லை.
பொதுமக்களில் சிலர் சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்களை மட்டுமே வாங்கியதுடன் தங்கள் கடமை முடிந்து விடுவதாக எண்ணி சென்று விடுகின்றனர். ஆனால் மக்களின் செல்போன்களில் அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அனைத்து பொருட்களும் வாங்கியதாக குறுஞ்செய்திகள் வந்துவிடும். இதன் மூலம் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் அதிகாரிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.
ரேசன் கடை ஊழியர்கள் ஒரு சில அதிகாரிகள் துணையுடன் ரேசன் அரிசி மூட்டைகளை இடை தரகர்கள் மூலம் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தை ஒட்டிய பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊட்டு வாழ் மடம் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
அதன் தலைவர் என்ற முறையில் ஸ்ரீ மணிகண்டன் என்பவர் அங்கு ஆய்வு செய்துள்ளார். அப்போது சுமார் 30 மூட்டை அரிசியை காணவில்லை என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதே கடையில் 3 கிலோ கோதுமை இருப்பு இருப்பதற்கு பதிலாக, 5 மூட்டை கோதுமை இருப்பதும் தெரியவந்தது. இதன் மூலம் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய கோதுமை வழங்கப்படவில்லை என்பதும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து உடனே மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த மாவட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதேபோன்று கடந்த ஜனவரி மாதம் வடசேரி பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் நடந்த சோதனையில் 45 மூட்டை ரேஷன் அரிசி முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இதுபோன்று புகார்கள் இருந்த வண்ணம் உள்ளது. இது குறித்து ஊட்டுவாழ்மடம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீ மணிகண்டன் கூறும்போது, "ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை வழங்கல் அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளை கண்டு கொள்வதே இல்லை.
ரேஷன் கடைகளுக்கு அரசு மூலம் விநியோகம் செய்யப்படும் பாமாயில்களில் பெரும்பாலான பகுதி முறைகேடான வழிகளில் ஓட்டல்களுக்கும், தனியாருக்கும் விற்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் சென்று கேட்கும் போது பாமாயில் தீர்ந்து விட்டது என்ற பதிலை கூறுகிறார்கள். அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதில் எடை குறைவு எனவும் புகார்கள் தொடர்ந்து வருகிறது, ஊழல் அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசி இருக்கிறதோ?.. இல்லையோ.. ஆனால் அதே அரிசி பட்டை தீட்டப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவில் பள பள அரிசியாக கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை பொருத்தவரை கோடீஸ்வரர்கள் அல்லது நடுத்தர வர்க்கத்திற்கு மேல் உள்ளவர்கள் எந்த காலத்திலும் அதனால் பல பயன் பெற போவதும் இல்லை. பயன்படுத்த போவதும் இல்லை.
நிலைமை இப்படி இருக்க நடுத்தர மற்றும் ஏழைகள் பாதிக்கப்படும்படியான இந்த முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகமும் வட்ட வழங்கல் துறையும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சீரான ரேஷன் பொருள் விநியோகம் நடைபெறும். உணவு என்பது அன்றாட மனிதனுக்கு தேவையான ஒன்று, அந்த உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது இந்த கோரிக்கை அனைத்து மக்களிடமும் எழுந்து உள்ள நிலையில் குறிப்பாக ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பொருள்களை அரசுக்கே தெரியாமல் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்யும் அரசு ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது இந்த அரசு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு பிடி அரிசி இருந்தால் கஞ்சி வைத்து குடித்து விடலாம் என்று எண்ணத்துடன் வாழும் ஏழை எளிய மக்களின் எண்ணங்களை நினைத்து பார்காமல் திருடி விற்று பணம் சம்பாதிக்கும் கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிண்டியில் சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு கண்டுபிடிப்பு!