கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்கள் உள்ளன. அதில், 2ஆவது சிவாலயம் திக்குறிச்சி மகாதேவர் சிவாலயம்.
இக்கோயிலில், கடந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கருவறைப் பூட்டை உடைத்து, பழமை வாய்ந்த பொக்கிஷமான மஹாதேவரின் ஐம்பொன் சிலை, நந்தி சிலை, திருமுகம், திருவாச்சி உட்பட பல லட்சம் மதிப்பிலான வரலாற்றுச் சுவடுகள் மற்றும் காணிக்கை பணம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு மாற்றிடவும், கொள்ளையர்களை விரைந்து கைது செய்யக் கோரியும், பா.ஜ.க, உட்பட பல இந்து அமைப்புகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனிடையே இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட காவல்துறை உட்பட பல துறைகளுக்கும் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.
மொட்டை அடித்து எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம்! கடந்த ஓராண்டாக கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்படாததைக் கண்டித்து, 10க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்தும், எருமைக்கு மனு கொடுத்தும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த நிகழ்வில், இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் மிசாசோமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.