கன்னியாகுமரி: பா.ஜ.க., அரசின் 9 ஆண்டுகள் கால சாதனைகளை விளக்கி பேசும் தெரு முனைக் கூட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தேசியச்செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாஜக அரசின் 9 ஆண்டுகள் கால சாதனைகளை விளக்கி கடைகள்தோறும் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம். இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பாஜக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. பாஜக நிலையான ஆட்சியைத் தொடர்ந்து தர முடியும். தேசம் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளது. திராவிட மாடல் என்பது கனிம வள கொள்ளை உடைய மாடலாக உள்ளது. செம்மண் கொள்ளை வழக்கில் மேலும் சில அமைச்சர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' எனக் கூறினார்.
''பொறுப்பு இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்போடு செய்த வேலை சாராய விற்பனை மூலம் திமுக அறிவாலயத்திற்குப் பணத்தை கொண்டு சென்றதை விட வேறு எதுவும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க., தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார். செந்தில் பாலாஜி-யின் ஊழல் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறி வந்துள்ளதை ஆதாரத்துடன் அண்ணாமலை இரண்டு ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.
அதனால் செந்தில் பாலாஜி மனைவி, நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீதும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தான் நியாயமானது. ஒரு சார்புடையதாக இருக்காது'' எனவும், வேண்டுகோள் விடுத்தார்.