கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள இறைச்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர், சதீஷ் (35), இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் பணியில் சேர்ந்தார். 15 ஆண்டுகளாக பல மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
அம்பாசா என்ற இடத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க மலைப் பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சதீஷ் மற்றும் வாகன ஓட்டுநர் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் இறந்த விவரம், அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.