கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு நேற்று (அக்.11) காலையில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அதிகாரிகள் பிரித்து பார்த்துள்ளனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதிலும், அந்த கடிதம் ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டு இருந்துள்ளது.
அதில், ‘நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேற்று (அக்.11) காலையில் வரும் பார்சலில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அது வெடித்து உங்களுடைய அலுவலகம் சிதறி சின்னா பின்னமாகப் போகிறது. எனவே தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், இந்த தகவலை நீங்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் கவலை இல்லை” என எழுதப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில் கடைசியாக தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அன்சாரி அமைப்பு என எழுதப்பட்டு இருந்தது. இதனைப் படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். மேலும், தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் இடையே தகவல் கசியத் தொடங்கியது.
உடனே பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். ஊழியர்கள் பதற்றத்துடன் பணியாற்றினர். உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தலைமை தபால் நிலைய முதுநிலை தபால் அதிகாரி செல்வராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வடச்சேரி போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, தலைமை தபால் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தாங்கள் அழைத்து வந்த மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்திற்கு வந்த பார்சல்கள் அனைத்தையும் மோப்பம் பிடிக்கச் செய்து வெடிகுண்டு சோதனை நடத்தினர்.