கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரேம் வினிஸ்டர் என்பவருக்கும், அவரது சகோதரர் பிரேம் அரிஸ்டாட்டில் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்னை இருந்துவந்தது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு பணக்குடி பகுதியில் பிரேம் அரிஸ்டாட்டில் கூலிப்படை மூலம் பிரேம் வினிஸ்டரை கொலைசெய்துள்ளார்.
இது தொடர்பாக பணக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூலிப்படையைச் சேர்ந்த ஈத்தமொழி வாலி என்ற சுயம்புலிங்கம் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொலைசெய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை முழுமையாகத் தரவில்லை என்பதால் பிரேம் அரிஸ்டாட்டிலை தேடிச்சென்ற வாலி, அவரது தாயார் பிரேமாவிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பிரேமா வடசேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, வாலி மீது, வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 294 (பி), 387, 506 (1) ஆகிய பிரிவுகளின்கீழ்) வழக்குப்பதிவு செய்ததோடு அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
பிரபல ரவுடியான வாலி மீது கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறை சென்றுள்ளார். திருந்தி வாழ நினைப்பதாகச் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு மனுவும் அனுப்பியிருந்தார். இவர், கடந்தாண்டு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் பார்க்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!