கன்னியாகுமரி: திருமாவளவனின் சர்ச்சைக்குரிய பேச்சு அரசியல் அல்ல, மண்ணின் பாரம்பரியம் சார்ந்த விவகாரம் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசின் உரிமைகளை மத்திய அரசுக்கு அதிமுக தாரைவார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் மோடி அரசு ஒருபோதும் செயல்படாது எனவும், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சிகளுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஜன்னியே வந்து விட்டதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நாத்திகத்திற்கு இடமில்லை எனவும், நாத்திகத்தை பரப்பினால் தோற்றுப் போவார்கள் என்பதால், அண்ணா கூட ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என கூறினார். அதனால் அவர் ஆன்மீகத்தை ஏற்றுக் கொண்டதாக மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார். விலைபோகாத பொருளை விற்க முடியாது என்பதால் அண்ணா கூட ஒன்றே குலம்; ஒருவனே தேவன் எனக் குறிப்பிட்டதாக கூறினார்.
நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் போன்றோர் அரசியலுக்கு வருவது குறித்து அவர் கூறுகையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி வருவதால் அவர்கள் பலன் பெறுவார்கள் அல்லது பாதிக்கப்படுவார்கள் என்று கூறியதோடு, அவர்களின் வருகை தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை, இஅ மண்ணின் பாரம்பரியம் சார்ந்த விவகாரம் என்றார். மேலும், தமிழ்நாடு தேர்தல் உடனடியாக வந்தாலும், அது பெரிய வெற்றியை ஈட்டும் வகையில் பலம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.