கன்னியாகுமரி :நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் இன்று (நவ.10) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பின்போது நாகர்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி, 'இந்து ஆலயங்கள் அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் அமைக்க உத்தரவு உள்ளது. வேணுகோபால் கமிஷன் அறிக்கையைப் பொருட்படுத்தாமல், பல தேவாலயங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
காவல் துறை பாதுகாப்போடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்படுகிறது. அனுமதி பெறாமல் பல இந்து ஆலயங்களை புனரமைக்கும்போது, அனுமதி உள்ளதா என கேள்வி கேட்கிறார்கள். இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை மீறி, பல வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.
மக்கள் மன அமைதியோடு வாழ வழிபாட்டுத்தலங்கள் தடையாக அமையக்கூடாது. புதிய வழிபாட்டுத்தலங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் மற்றும் தலைமைச்செயலர் இருவரையும் சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை நேரம் தரவில்லை.