பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் தற்போது மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நள்ளிரவு பன்னிரெண்டு மணி முதல் ஒரு மணி வரை வலிய படுக்கை பூஜை நடைபெற்றது. பூஜையின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பலாப்பழம், மாம்பழம், கரும்பு உள்ளிட்ட பல வகையான கனிகள் படைக்கப்பட்டன.
ஆண்டிற்கு மூன்று முறை இந்த பூஜை நடைபெற்றாலும் மாசித் திருவிழாவின்போது நடைபெறும் இந்த பூஜை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பூஜையில் இடம்பெறும் முற்றிய தேங்காய், தென்னங்கன்று போன்ற ஒரு சில பொருள்கள் இங்கு மட்டுமே அம்மனுக்கு படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபடுவதற்காக தமிழ்நாடு, கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு, கேரள அரசுப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இரவு முழுவதும் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: காஞ்சி காமாட்சி பிரம்மோற்சவ 8ஆம் நாள்: அம்மன் வெள்ளி பத்ரபீட வாகனத்தில் ஊர்வலம்