கன்னியாகுமரி: புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் கோணத்து விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீதா(29). பிரவீதா உள்ளிட்ட சிலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.56 லட்சம் வரை பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் ஏமாற்றிவிட்டதாகவும், அந்த பணத்தை மீட்டுத் தருமாறும் நாகர்கோவில் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "ஐரேனிபுரத்தைச் சேர்ந்தவர் அபிஷா(33). இவருடன் கடந்த சில நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசில் பணி புரியும், ஊழியர் ஜோயல் தேவா(37) என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும் சேர்ந்து, தங்களுக்கு ரயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரயில்வே துறையில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினார்கள்.
ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால், பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். ஆகையால் அவர்கள் கூறியதை நம்பி நான் முதலில் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் என 4 பேரிடமும் ரயில்வே வேலை வாங்கி தருவதாகக் கூறி மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள்.
ஆனால் அவர்கள் கூறியது போல, ரயில்வே வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் அந்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்தனர். தற்போது வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். மேலும் இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி(24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கும் தொடர்பு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். ஆகையால், இந்த மோசடி தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்.