கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், 'அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகின்ற அரிசியின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொது மக்கள் நலன் கருதி தரமான அரிசியை வழங்க வேண்டும்.
கரோனா ஊரடங்கு காரணமாக மகளிர் குழுக்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்கள். தனியார் நிறுவனங்கள் வீடு தேடிச் சென்று கடன்களை திருப்பிச் செலுத்த சுய உதவிக் குழுவினரை வற்புறுத்தி வருகின்றனர். கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் உடனே அதனை திருப்பி செலுத்த வற்புறுத்தக்கூடாது.
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும்போது அலுவலர்கள் பாரபட்சம் காட்டக்கூடாது. நிவாரணத் தொகையை காலதாமதமின்றி உடனடியாக வழங்கவேண்டும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தற்போது பெய்த மழையினால் அங்கு உள்ள தெப்பக்குளம் நிரம்பவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு தண்ணீர் நிரம்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.