அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள அய்யா வழி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் நிர்வாகி பூஜிதகுரு பால ஜனாதிபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்த அவதார தினத்தையொட்டி, மார்ச் 2ஆம் தேதி திருச்செந்தூர் அய்யா அவதாரப் பதியிலிருந்து ஒரு வாகனப் பவனியும், திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயில் அருகிலிருந்து ஒரு வாகனப் பவனியும் தொடங்கி அன்றைய தினம் இரவு நாகர்கோவில் நாகராஜா திடலில் உள்ள அய்யா வழி மாநாட்டுத் திடலை வந்தடைகின்றன.
அய்யா வைகுண்டர் அவதார விழா பின்னர் மார்ச் 3ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மாசி ஊர்வலம் நடைபெறவுள்ளது. அதில், அகிலத்திரட்டு அம்மானை தாங்கிய வாகனப் பவனி தொடங்கி சாமித்தோப்பு தலைமைபதிக்கு வருகிறது. இந்தப் பவனியில் குருமார்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே, இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கவேண்டும். அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கவேண்டும். ஒரு குடையின் கீழ் இந்த உலகத்தை தர்ம யுகமாக்கி தரணியை ஆளுவதற்கு வந்த வைகுண்டரின் செய்தியை உலகிற்கு அறியச் செய்வதற்காக அய்யாவின் அன்பு பாதைக்கு உலகை அழைக்கும், 'வெல்கம் இந்தியா', 'உலகை வரவேற்கிறோம்' என்ற நிகழ்வை நடத்தவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.79 லட்சம்