கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் தடை தோஷம் நீங்குவது, குழந்தை பேரு உள்ளிட்ட வேண்டுதல்களை நாகராஜா சுவாமி முன்வைத்து இங்குள்ள 500க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு உப்பு, முட்டை, தாலி பூ உள்ளிட்ட பொருள்களை கொண்டு பூஜை செய்து செல்வது வழக்கம்.
நாகர்கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை திருவிழா
கன்னியாகுமரி: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பாரம்பரியமாக நடைபெறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுத் திருவிழாவில் இன்று (செப் 6) நடைபெற்றது.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்ட கோயில் தற்போது திறக்கபட்டது. அதிலும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களில் தளர்வுகளோடு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமலில் இருந்ததால், இரண்டு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வேண்டுதல் விழா நடைபெறாமல் இருந்தது. செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அரசு ரத்து செய்ததையொட்டி ஆவணி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான் இன்று (செப் 6) திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கமாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தற்போது இல்லை. அதே வேளையில் பக்தர்கள் ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி வழிபாடுகளை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.