கன்னியாகுமரி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய அரிசி கொம்பன் யானை தமிழக கேரள எல்லைப்பகுதியான பெரியார் புலிகள் காப்பகம் முல்லைக் கொடி பகுதியில் கொண்டு விடப்பட்டது. அது அங்கிருந்து காடுகள் வழியாக சுற்றித்திரிந்து கம்பம் நகருக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டது.பின், அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மிகுந்த பாதுகாப்புடன் லாரி மூலம் குமரி நெல்லை எல்கையில் உள்ள அப்பர் கோதையாரின் அருகே உள்ள முத்துகுழி வயல் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டுவிட்டனர்.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது யானைப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து வனத்துறை அதிகாரிகள் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டதால் காடுகளில் யானையின் இருப்பிடம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது யானை கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு மேலே உள்ள குற்றியாறு அணைப் பகுதியில் வாழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 42 கடலோர காவல் நிலையங்களில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி - டிஐஜி கயல்விழி
குற்றியாறு அணைப் பகுதியில் மெலிந்த தோற்றத்துடன் சுற்றித் திரியும் அரிசி கொம்பன் யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறையினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளனர். பேச்சிப்பாறை அணைக்கு மேலே குற்றியாறு அணைப் பகுதியில் உள்ள பிற யானைகள் அருகே அடிக்கடி அரிசி கொம்பன் யானை வந்து செல்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா கூறியதாவது, ''அரிசி கொம்பன் யானை உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. மெலிந்த நிலையிலிருந்தாலும், உடல் உறுப்புகள் நன்றாகவே உள்ளன. முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் யானையின் வயிற்றுப் பகுதி உப்பிசமாகத் தெரிந்தது. ஆனால் தற்போது காட்டு உணவுகள் போன்ற சத்தானதாக உண்பதால் அரிசி கொம்பன் உடல் நன்றாக தேறிக்கொண்டு வருகிறது.
யானை நன்றாக உணவுகளை எடுத்து கொள்கிறது, நன்றாக நடக்கிறது. அதுமட்டுமில்லாமல் வனத்துறை கால்நடை மருத்துவர்களால் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. மேலும், தொலை தூரத்தில் அதாவது நூறு மீட்டர் தொலைவிலிருந்து யானையைப் புகைப்படம் எடுப்பதாலே யானையின் உடல் மெலிந்து தெரிகிறது’’ என்றார்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும் - எடப்பாடி பழனிசாமி