கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை கன்னியாகுமரி:பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணம் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். அவர் தனது நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த மாதம் தொடங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். 6 மாத காலம் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு 225 ஊர்களில் உள்ள பொது மக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை சென்னையில் ஜனவரி மாதம் 11ஆம் தேதி பாத யாத்திரையை முடிவு செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை, தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இருந்து துவங்கினார். முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு களியக்காவிளை பகுதியில் அமைக்கபட்டு இருந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய அண்ணாமலை, தொடர்ந்து 4 கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக குழித்துறை வந்தடைந்தார். இதில் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு கூடவே பயணித்து வருகின்றனர். முன்னதாக கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டி கொண்டு இருக்கின்றோம். 2047ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள். புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு தி.மு.க. முழுக்க முழுக்க எதிரியாக உள்ளது. ஆளும் கட்சியாக தி.மு.க. வந்த பிறகும், முதலமைச்சர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க., எதிர்க்கட்சி போல் நடப்பது சரியா?. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும். பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பதும் தவறு.
வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். இன்னும் முதலமைச்சர் வன்மத்தை தூண்டுகிறார். அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மிக சிறப்பாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். சமூகத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். சமூக அக்கறையில் படம் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை மையமாக படம் எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும். இதனை முதலமைச்சர் பாராட்டுகிறார். நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் அவர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு இன்று (ஆகஸ்ட்.16) ஓய்வு என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (ஆகஸ்ட் 17) காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார் மடம் பகுதியில் இருந்து அண்ணாமலை மீண்டும் நடை பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாட்கள், குமரி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு யார் காரணம்? இளஞ்சிறார் குற்றத்திற்கு சினிமா தான் காரணமா? குற்றவியல் துறை கூறுவது என்ன?