கன்னியாகுமரி: தக்கலை அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாக இருந்தவர் பெனடிக் ஆன்டோ. தேவாலயங்களுக்கு வரும் இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக சாட்டிங் செய்ததாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியர் பெனடிக் ஆன்டோ மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த 19ஆம் தேதி பாதிரியார் பெனடிக் ஆன்டோவை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு கருதி அவரை நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை சிறைக்கு போலீசார் மாற்றினர்.
இதனிடையே ஒரு நாள் காவலில் பெனடிக் ஆன்டோ எடுக்கப்பட்டு விசாரணைக்காக நாகர்கோவில் அழைத்துவரப்பட்டார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடைய லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த பெண்களின் புகைப்படங்கள், சாட்டிங் செய்த பெண்களின் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டது.