கரோனா தொற்று பரவலால் கடைப்பிடிக்கப்படும் பொதுமுடக்கத்தால் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கரோனா தொற்றை விட நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலைதான் எங்களை அச்சுறுத்துகிறது என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கரோனா காலத்தில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், நேற்று (ஜூலை 14) சாலை வரியை ரத்து செய்யக் கோரி மாநிலம் தழுவிய கவன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்: சாலை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையரிடம் மனு அளித்தனர். அதில், சாலை வரி ரத்து, மாத தவணை கடன் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம், இ-பாஸ் முறையை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.