கன்னியாகுமரி:மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வழக்கறிஞர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அந்தவகையில் தலைநகர் டெல்லியில், விவசாயிகள் ஒன்று திரண்டு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவை பதிவுசெய்து வருகின்றனர்.
இச்சூழலில் குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் இருக்கிறது. எனவே விவசாயிகளை பாதிக்கும் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வேளாண் மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களை உடனடியாக முழுமையாக திறப்பதற்கு தலைமை நீதியரசர் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தனர்.