கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாம்பன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஜெனிஸ். இவருக்கும் லிபிஜோ என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தை பிறக்காததால், ஆல்பிரின் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். இதனிடையே, லிபிஜோ உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார்.
இதையடுத்து அருண் ஜெனிஸ், ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தையுடன் இருந்த ரதி தேவி என்ற பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், ரதி தேவிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக, நான்கு வயதாகும் தத்தெடுத்த மகனை தாத்தா-பாட்டியின் பராமரிப்பில் விட்டுள்ளார்.
சொந்தக் குழந்தை பிறந்த 2 நாளில், தத்தெடுத்த குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி இந்நிலையில், சிறுவன் ஆல்பிரின் வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவன் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பந்து தண்ணீர் தொட்டியில் விழுந்ததாகவும், அதை எடுப்பதற்காக முயன்றபோது தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் ஆல்பிரின் மரணமடைந்திருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை.27) உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க:கலர் கலரான போதை மாத்திரைகள் பறிமுதல்!