கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அன்பு வனத்தில் உள்ள அய்யா வைகுணடசாமி இல்லத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதி, மத பேதமில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டவர் அய்யா வைகுண்டசாமி.
‘அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது’ - முத்தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கன்னியாகுமரி: அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது என்றும், தமிழ்நாட்டில் அதிமுகவை வழி நடத்துவதே பாஜகதான் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி தனது சொந்த பலத்தை தார்மீக ரீதியாக இழந்துவிட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது. மாநிலத்தில் எப்படி பாஜகவை மக்கள் நிராகரித்தார்களோ அதேபோல் அதிமுகவையும் நிராகரித்துவிட்டார்கள். அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை, உட்கட்சி பிரச்னை. அதை அவர்களே தீர்க்க வேண்டும்.
அதேபோல், அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவை வழிநடத்துவதே பாஜகதான். அதிமுக என்ற வாழைமரம் காற்றில் விழுந்து விடாமல் இருக்க மோடி தான் முட்டுக்கொடுத்துள்ளார். அவர் மட்டும் முட்டு கொடுப்பதை எடுத்தால் வாழைமரம் சாய்வது போல அதிமுக சாய்ந்துவிடும்” என்றார்.