நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் "காக்டெய்ல்". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனமும் காவல் நிலையத்தில் புகாரும் அளித்து வருகின்றனர்.
முருகக் கடவுளை இழிவுபடுத்தியதாக யோகி பாபு மீது போலீஸ் புகார்! - cocktail first look poster lord muruga
கன்னியாகுமரி: முருக கடவுளை அவமதிக்கும் வகையில் திரைப்படம் எடுத்ததாக யோகிபாபு, அதன் தயாரிப்பாளர்கள் மீது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோயில் காவடி பக்தர்கள் சங்கம் சார்பாக அதன் உறுப்பினர் நாராயணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “நான் அஞ்சுகிராமத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறேன். மேலும் அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோயில் காவடி பக்தர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன்.
இந்நிலையில் 'காக்டெயில்' என்ற பெயரில் திரைப்பட விளம்பரம் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் பார்த்தேன். இதில் முருகக்கடவுளின் வேடமணிந்து நடிகர் யோகி பாபு நிற்க, அவர் பின்னால் வாகனமாக கிளி ஒன்றும் உள்ளது. அந்தப் படத்தின் கீழ் காக்டெயில் மது கலவை என்று பொருள்படும் விதமாகத் திரைப்படத்தின் பெயரை வைத்துள்ளனர். நாங்கள் பக்தியுடன் வழிபடும் முருகக் கடவுளையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி, முருகக்கடவுளின் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. எனவே காவல் துறையினர் இத்திரைப்படத்தின் இயக்குநர் விஜய முருகன், தயாரிப்பாளர்கள் முத்தையா, தீபா, நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.