கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து, பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "இப்போது இருக்கும் காங்கிரஸ், பழைய காங்கிரஸ் அல்ல. இவர்கள் தோற்றாலும் அடித்துக் கொள்வார்கள், ஜெயித்தாலும் அடித்துக் கொள்வார்கள்.
கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் இரட்டை ரயில் பாதை, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், அவற்றை காங்கிரசார் நடக்கவிடாமல் செய்துவிட்டனர்.
கடந்த முறை தவறான நபரைத் தேர்வு செய்ததால், அனைத்துத் திட்டங்களும் கிடப்பில் உள்ளன. எனவே இந்த முறையாவது சரியான ஆளான பொன். ராதாகிருஷ்ணனைத் தேர்வுசெய்யுங்கள்.
நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் செந்தில் பரப்புரை சிலருக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நன்றாக இருந்தால் பிடிக்காது. எனவே அது சரியில்லை இது வந்தால் நல்லா இருக்காது என்று கூறி கலகத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
அதேபோலத்தான், சில கட்சியினர் எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் வேண்டாம் என்று போராடிவருகின்றனர். தாமரை மலர்ந்தால்தான் நமது சந்ததியினர் நன்றாக இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாழ முடியுமா? அல்லது வாழத்தான் விடுவார்களா?