கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியபோது, இந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது என்றும்;அத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
முதலாவதாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிடப்பட்ட நிலையில் அந்த குழுவின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி இருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தீவிரவாதத்தைக் கண்காணிப்பதற்கு எவ்வாறு கியூ பிராஞ்ச் இருக்கிறதோ, அது போல சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசு இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இரட்டைக் குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. அவற்றைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு வெளிச்சத்திற்கு வந்தாலும் கூட பல இடங்களில் இது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதை முற்றாக ஒழிப்பதற்கு முதலமைச்சர், காவல் துறைக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவை பற்றி ஒரு ஆய்வை நடத்துவதற்கு அறிக்கை அளிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பது குறித்த கேள்விக்கு?, “தமிழ்நாடு அமைச்சர் சட்டப்பேரவையில் அது ராமர் பாலம் இல்லை என்று பேசினார். மீண்டும் அவர்கள் ராமர் பாலம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அங்கு சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகிறது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கருத்துபவர்கள் ராமர் பாலம் பிரச்னையை கையில் எடுக்கிறார்கள்” என்றார்.