தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கோயில்கள் திறப்பு!

தமிழ்நாடு அரசு கரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள கோயில்கள் இன்று திறக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் இன்று கோயில்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் இன்று கோயில்கள் திறப்பு

By

Published : Sep 1, 2020, 3:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கரோனா தொற்று பரவலை பொறுத்தும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அரசு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்று (செப்.1) முதல் திறக்க அரசு அனுமதி வழங்கி இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் ஆலயம் உள்ளது. காசி விசுவநாதரை வழிபட காலை முதலே திரளான பக்தர்கள் கோயில் வாசலில் காத்திருந்தனர். சுமார் 7 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வேளிமலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இன்று காலை முதல் பக்தர்கள் ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதால் அந்தந்த கோயில்களில் பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்ற ஐந்து மாதங்களுக்கும் மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், இன்று பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

பொள்ளாச்சி

கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆறு மாதத்திற்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோயில், அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் முகக்கவசம் இல்லாமல் கோயிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஆறு தாலுகாக்களில் உள்ள 2,327 கோயில்கள் இன்று திறக்கப்பட்டன. கரோனா தொற்றால் கோயில்களில் குறைந்த அளவிலான பக்தர்களின் வருகையே காணப்பட்டன. இருப்பினும், ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் ஆட்டத்துடன் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி தலைவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details