வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்யும்போது ஏதாவது ஒரு மதச்சடங்கை பின்பற்றுவர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளம் ஜோடி அதற்கு மாற்றாக பண்டைய தமிழர் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி- ராஜன் ஆகியோர் தான் அந்த தம்பதியினர்.
இவர்கள் மதங்களை கடந்து பண்டைய தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது இந்த முடிவுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருதரப்பு பெற்றோரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்துள்ளனர். திருமணத்திற்கு வந்த உறவினர்களும் இதில் உற்சாகமாக பங்கேற்கவே திருமண நிகழ்வே களைகட்டியது.
திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமக்களின் மாமன்மார்கள் பங்கேற்ற நிச்சயதார்த்தமும், முகூர்த்தத்தின் போது மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட தாலி கட்டியதும் காண்போரை கவர்ந்தது. மணமகனுக்கு இருபத்து மூன்று வகையான நவதானியங்களில் மணப்பெண் உள்பட குடும்பத்தினர் ஆரத்தி எடுத்ததும் காண்போரை மிகமிக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பண்டைய தமிழர் முறைப்படி அரங்கேறிய திருமண வைபவம் பண்டைய காலங்களில் திருமணத்தின் போது பின்பற்றப்பட்ட சடங்குகளை இந்தத் திருமணத்தில் மணமக்கள் குடும்பத்தினரும் பின்பற்றினர். மண நிகழ்ச்சியின்போது பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்து பரிசாக அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள் - உக்ரைனில் புதுமையான முறையில் திருமணம்!