கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழிப் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் மற்றொரு கிளை மருத்துவமனை நாகர்கோவில் கோட்டார் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள ஆம்புலன்ஸ் இரண்டு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய ஜெருஸ்லின் என்பவர் ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார்.
இன்று(செப்.11) அதிகாலையில் ஆம்புலன்ஸ் நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ளது. அதிகாலை என்பதால் சாலையில் வாகனப்போக்குவரத்து குறைவாக உள்ள நிலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கோவில்விளை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பேக்கரி கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.