கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையோரப்பகுதியில் அமைந்துள்ள கோலஞ்சிமடம் ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் சாலைவசதி, பாலம் இல்லாததால், சுமார் 3 கிலோ மீட்டர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் தோளில் தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவ்வாறு செல்லும் வழியில் தூக்கி செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி ஆதிவாசி மக்கள் வாழும் கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மலையோர கிராமமான கோலஞ்சிமடம் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கும்பாறு பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்காலிகமாக மரக்கட்டைகளைக்கொண்டு அவர்களாகவே நடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துள்ளனர்.
கிராம மக்கள் அமைத்த அந்த தற்காலிகப்பாலம் மழைக்காலங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்வது வழக்கம். ஆனாலும், தங்கள் அத்தியாவசிய தேவைக்காக அவ்வப்போது மரக்கட்டைகளைக்கொண்டு பாலம் அமைப்பார்கள். இந்தப்பகுதியில் பாலம் கட்ட 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.