கன்னியாகுமரி: குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்ரல் 02) கலந்து கொண்டு பாஜக - அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
இதற்காக அவர் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு மாலை 4.25 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.
அவருக்கு விழா மேடையில் வைத்து நினைவுப்பரிசு வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 'மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக நாங்கள் உள்ளோம். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ராயில்பாதை 50 ஆண்டுகளாக அப்படியே கிடந்தது. 50 ஆண்டுகளுக்குப்பிறகு, நமது அரசு தான் அதனை சீர் செய்தது.
அன்போடு பண்போடு
பாம்பன் பாலமும் நாங்கள் தான் சீர் செய்தோம். தமிழ்நாட்டில் ஒரு கட்சி அவர்களின் வாரிசுகள் குறித்து மட்டுமே கவலைப்படுகிறது. உங்களின் குழந்தைகள் குறித்து, அவர்கள் கவலைப்படவில்லை. டெல்லியின் மத்தியப்பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச்சின்னத்தைக் கட்ட பலகோடி மதிப்புள்ள இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நாங்கள் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் கட்டினோம். கருணாநிதியுடன் வேலை பார்த்த திமுக சகாக்கள், திடீரென அவரது மகன் இளவரசனாக மகுடம் சூட்டி வந்ததால் மனப்புழுக்கத்தில் உள்ளனர்.
தகுதிக்கு பதவி கொடுக்காமல், உறவுக்கு பதவி கொடுக்கிறார்கள். காங்கிரஸ் சட்டப்பிரிவு 356-ஐ அதிகமுறை பயன்படுத்தி உள்ளது. திமுக உள்ளிட்டப் பல்வேறு மாநிலக் காட்சிகளை பல்வேறு முறை கலைத்துள்ளது.
இந்த அரசு அனைவருக்குமான அரசு. மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் மோதிக்கொண்டே இருக்கட்டும். நாங்கள் அன்போடும், பண்போடும் இருப்போம். கடந்த ஆண்டு கோவிட் தொற்றுப் பரவலின்போது பல இந்திய மக்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்களின் சாதி, மதத்தை நாங்கள் பார்க்கவில்லை. அனைவரையும் இந்திய மக்களாகத் தான் பார்த்தோம்.